Friday, April 10, 2009

பலா

என்னை பலா-ன்னு சொல்லுவாங்க. நான் இந்தியால தான் பொறந்தேன். இங்கிலீஷில் Jack என்று என்ன கூப்பிடுவாங்க. இந்த பேரு என்னோட மலையாளப் பேரான 'சக்க'-ல இருந்து காப்பி அடிச்சது தான்.

நான் மல்பெரி குடும்பத்தைச் சார்ந்தவன். கறிச்சக்க(Bread fruit), அத்தி எல்லாம் என்னோட சொந்தக்காரங்க தான். அறிவியல் பூர்வமா என்னை Artocarpus Heterophyllius Lam என்று தான் கூப்பிடணும்.

பங்களாதேஷ், இந்தோனேஷியாவில நான் தான் தேசியப் பழம்.

மரங்களில் காய்க்கக் கூடிய பழங்களில் நான் தான் உலகத்துலே ரொம்ப பெருசு.
முக்கனிகளில் நானும் ஒண்ணுங்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.

அந்த காலத்துல தென்னிந்தியாவில, நான் நிறைய காய்ச்சியிருந்தேன்னா, அத வச்சே, அந்த ஊரு ரொம்ப செழிப்பா இருக்குன்னு சொல்வாங்களாம்.

எங்கிட்ட நிறைய பொட்டாசியமும் விட்டமின்-ஏ யும் இருக்கு. என்னோட விதைகளையும் நீங்க சாப்பிடலாம். அதுல கார்போஹைட்ரேடு இருக்கு.

என்னை மட்டும் தனியா சாப்பிட்டீங்கன்னா செரிக்க ரொம்ப டைம் ஆகும். அதனால கொஞ்சம் வெல்லம் அல்லது தேன் சேர்த்து சாப்பிடணும்.

சர்க்கரை வியாதிக்காரங்க என்ன தயவுசெஞ்சு தொடாதீங்க.

திராட்சை

என்னோட பேரு திராட்சைங்க. நான் Vitaceae குடும்பத்த சார்ந்தவன். Vitis Vinifera-இது தான் என்னோட அறிவியல் பேரு.

என்ன 6000 வருஷத்துக்கு முன்னாடி ஐரோப்பால விவசாயம் பண்ண ஆரம்பிசாங்க. ஒலகத்துல விவசாயம் பண்ற பயிர்களிலேயே நான் தான் டாப்புல இருக்கேன் தெரியுமா?

ரோம நாட்டுல என்னையும் தானியங்களையும் தான் செழிப்பின் அடையாளமா கருதுனாங்க.
அங்க விவசாயிகள் வெயிலில் வேல செய்யும் போது சூட்டைத் தவிர்க்க என்னோட இலைய அவங்கத் தொப்பியில சொருகி வச்சுப்பாங்க.

கிமு 2440-ல எகிப்திய கல்லறைகளோட மேல் சுவர்கள்ல என்னோட படத்த வரைஞ்சு வச்சிருக்காங்க.
பைபிள் படிச்சீங்கன்னா என்ன நோவா காலத்துலே விவசாயம் பண்ணியிருக்காங்கன்னு உங்களுக்கு தெரிய வரும்.

பொதுவா பிரெஞ்சு மக்கள் அவங்க உணவுல அதிகமா பட்டர் சேர்த்துப்பாங்க. அதிகமா புகை பிடிக்கிற பழக்கமும் அவங்களுக்கு உண்டு. இருந்தாலும் அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரக்கூடிய வாய்ப்பு ரொம்ப குறைவு, ஏன் தெரியுமா? என்னோட பழங்களையும் ஒயினயும் அவங்க உணவில அதிகம் சேர்த்துக்கிறதால தான்.

என்ன உலர் திராட்சையாவும் ஒயினாவும் பதப்படுத்தி வைக்கலாம்.

எங்கிட்ட அதிகமா மாங்கனீசு, பொட்டாசியம், விட்டமின் பி6, சி இருக்கு.

என்ன அடிக்கடி சாப்பிட்டீங்கன்னா உங்கள ஹார்ட் அட்டாக் மற்றும் ரத்த அழுத்தத்தில் இருந்து நான் காப்பாத்துறேன்.

Thursday, March 26, 2009

பாம்பிலிருந்து வந்த நீர்யானை

இப்படியெல்லாமா தாவரங்கள் இருக்கும்?

கம்பளிப்புழு கூடு கட்டும் கலை

முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு

பாம்பு முட்டை சாப்பிடுவதைப் பாருங்கள்

கடவுளும் மூடநம்பிக்கைகளும் - 2

ஆதிகாலத்தில் மனிதன், தனக்குப் புரியாத விஷயங்களைப் பார்த்துப் பயந்தான்; பின்னர் தான் உண்பவற்றை, அதிலும் தனக்கு மிகவும் பிடித்தமான உணவைக் கொடுத்தால் அவை தன்னை ஒன்றும் செய்யாது என்று நம்பினான். இது ஆதி காலத்தில் மட்டுமா? இன்றும் நடக்கிறது.

கிழங்கு, பழங்களை சாப்பிட்டு வந்த மனிதன் நாகரிக வள்ர்ச்சியின் காரணமாக நெல்லைக் கண்டான். நாக்கின் சுவைக்கேற்ப வெல்லம் சேர்த்து பொங்கல் செய்தான். தனக்குச் சுவையாக தெரிவது கடவுளுக்கும் பிடிக்கும் என்று எண்ணி கடவுளுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறான். மக்கள் கூடி ஒற்றுமையாக இருப்பதற்கு வேண்டுமானால் இம்மாதிரியான் விஷயங்களை சரி என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இவை மூடநம்பிக்கைகளாக மாறி, பொங்கல் வைத்தால் தான் கடவுள் நினைத்ததைக் கொடுப்பார் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

கடவுளுக்குப் பணம் கொடுப்பது இன்னொரு கலாச்சாரம்.

ஒருவன் தன் தாயிடம் சென்று 'எனக்குப் பிடித்த கத்திரிக்காய் குழம்பு செய்து குடும்மா. உனக்கு 1000 ரூபாய் கொடுக்கிறேன்' என்று சொன்னால் அந்த தாய்க்கு எவ்வளவு கோபம் வரும். பின் ஏன் தன்னை கடவுள் தான் படைத்தார் என்று நம்பும் மக்கள்,பணம், தங்கம், வெள்ளி என்று கோவிலில் கொட்டுகிறார்கள்?

கோவிலில் ஆடு, கோழியின் கழுத்தைக் கடித்து ரத்தம் குடித்தால் மக்கள் கூடி நின்று வேடிக்கைப் பார்க்கிறார்கள்.
அதே நேரத்தில் தன் குழந்தையைப் பிடித்துக் கடித்தால் சாமி தான் கடிக்கிறதென்று சும்மா இருப்பார்களா?

வாயில்லா பிராணிகளைக் கொன்று தின்கிறார்களே...........மனிதனை நரபலி கொடுத்தால் மட்டும் ஏன் போலிசுக்குப் போகிறார்கள்? தன்னைப் போலத்தானே அதற்கும் ரத்தம் இருக்கிறது; தன்னைப் போலத்தானே அதுவும் கதறுகிறதென்று ஏன் எண்ணிப் பார்க்கவில்லை?

ஒன்றை கொன்று ஒன்று வாழ வேண்டுமென்பது தான் இயற்கை நியதி. தாவரங்களை மட்டும் கூட தின்று நாம் உயிர் வாழலாமே. நம்மைப் போல் ரத்தமுள்ள, நம்மைப்போல் கதறுகின்ற உயிர்களை விட்டு வைக்கலாமே.

இப்படி யோசித்துக் கொண்டேயிருந்தால் அப்புறம் எப்படி தூக்கம் வரும்? விடிந்தது தான் மிச்சம். எழுந்து வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

கடவுளும் மூடநம்பிக்கைகளும் - 1

ஒரு வாரமாக எனக்கு கடுமையான முதுகு வலி. அம்மாவிடம் தொலைபேசியில் பேசும் போது இதைச் சொன்னேன். அவர்களும் தனக்குத் தெரிந்த மருந்தெல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் 'கடவுளை நல்லா வேண்டிக்கோ, எல்லாம் சரியாயிடும்' என்று சொன்னார்கள்.

அன்றிரவு நள்ளிரவில் திடீரென தூக்கம் போய் விட்டது. மனம் தானாக எங்கெல்லாமோ போய் விட்டு, கடைசியில் அம்மா சொன்ன விஷயத்துக்கு வந்தது. கடவுள் என்றால் என்ன? ஏன் வேண்டிக்கொள்ள வேண்டும் என்று பட்டிமன்றம் ஆரம்பித்தது.

மனிதன் தனக்குப் புரியாத விஷயத்தைத் தான் கடவுள் என்று சொல்ல ஆரம்பித்திருக்க வேண்டும். புரியாத விஷயமென்றால்...... குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வெப்பநிலையில் நீராவி மழையாக மாறுவதோ; மரங்கள் மட்கி நிலக்கரியாக, பெட்ரோலியமாக, வைரமாக மாறுவதோ இல்லை. இவை எல்லாம் வேதியியல் மாற்றங்கள்.

சூரிய ஒளி வீசும் திசையை நோக்கி ஒரு கிளையை நீட்டலாம் என்று மரம் நினைக்கிறதே அது புரியாத விஷயம்.
தன் பக்கத்தில் ஒரு கம்பி இருந்தால் அதைப் பிடித்துக் கொண்டு கொடி படர்கிறதே அது ஆச்ச்ர்யமான விஷயம்.
ஒரு கோழியின் அத்தனை உறுப்புகளையும் உருவாக்கும் சக்தி ஒரு முட்டைக்குள் இருக்கிறதே அது தான் அதிசயம்.

முட்டைக்குள் என்ன இருக்கிறது? டி என் ஏ இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத டி என் ஏ வில் எத்தனையோ விஷயங்கள் புதைந்து கிடக்கிறதே.. என்னைப் பொருத்த வரையில், ஒரு விஞ்ஞானியைப் பொருத்தவரையில் அது தான் கடவுள்.

சரி... இப்போ டி என் ஏ எங்கிருக்கிறது? எல்லா உயிர்களிடத்திலும் இருக்கிறது. இதற்கு மேலும் கடவுள் எங்கிருக்கிறாரென்று நான் சொல்ல வேண்டுமா?

பிரச்சனைகளுக்காக எங்கெங்கோ சென்று வேண்டுவதை விட தன் ஆழ் மனதிடம் சொன்னால் எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன். உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாய் இருக்கிறேன்.

Monday, March 23, 2009

வரதட்சணை

மாலதிக்கு நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்ததில் வீடே சந்தோஷமாக இருந்தது.

மாப்பிள்ளை கணேஷ், வீட்டிற்கு ஒரே பையன். வங்கியில் வேலை. வரதட்சணையாக ஒரு லட்சம் பணமும் ஐம்பது சவரன் நகையும் கேட்டிருந்தார்கள். நூற்பாலையில் வேலை பார்க்கும் சிவராமனுக்கு இது அதிகமாக தெரிந்தாலும் தன் மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமென்று நினைத்ததால் சம்மதித்தார்.

மாலதிக்கு இரண்டு தங்கைகள். லதா கல்லூரியிலும் யாமினி பத்தாம் வகுப்பிலும் படிக்கிறார்கள். தன் வீட்டில் புதிதாக ஒரு சொந்தம் வருவதில் யாமினிக்கு எல்லோரையும் விட மிகவும் சந்தோஷம்.

பணத்திற்காக சிவராமன் பலரிடம் கடன் வாங்கினார். திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு அவர்கள் கேட்ட ஒரு லட்சத்தை உறவினர்கள் சிலரோடு சென்று சிவராமன் கொடுத்து வந்தார்.

பணம் கொடுத்த மூன்றாம் நாள் கணேஷின் அப்பா யாமினியின் வீட்டிற்கு வந்தார். சிவராமன் வேலைக்கு சென்றிருந்ததால், அவள் அம்மா அவரை வரவேற்றார். மாலதி தன் வருங்கால மாமனாருக்கு தேநீர் கொண்டு வந்து கொடுத்தார். மகள்கள் மூவரும் அடுத்த அறையில் நின்று கொண்டு அவர் வந்த காரணம் அறிய ஆவலோடிருந்தனர்.

வந்தவர் தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

"நீங்க கொடுத்த ஒரு லட்சம் பணத்தை எண்ணிப் பார்த்தபோது மூவாயிரம் ரூபாய் குறையுது."

கேட்டுக்கொண்டிருந்த அனைவருக்கும் முகம் மாறிப்போனது.

அவர் மேலும் தொடர்ந்தார். " ஆரம்பமே சரி இல்லாதது போல் தோணுது. பணத்தை சீக்கிரம் கொடுங்க. அதன் பிறகு தான் கல்யாணப் பத்திரிகை அடிப்பது பற்றி யோசிக்கணும்.
மாலதியும் லதாவும் மௌனமாக இருந்தனர்.

ஆனால் கேட்டுக்கொண்டிருந்த யாமினிக்கு "போயா வெளியே" என்று கத்தணும் போல இருந்தது. ஆனால்... 'இது அக்காவின் வாழ்க்கைப் பிரச்சனை. நாம் எப்படி தலையிடுவது? நான் மட்டும் அக்காவின் நிலையில் இருந்தால் நிச்சயம் இப்படி சொல்லியிருப்பேன்' என்று நினைத்துக்கொண்டாள்.

அவள் அம்மாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருப்பினும் நிலைமையை சமாளிக்க, "நாங்கள் எண்ணிப் பார்க்கும் போது சரியாகத்தான் இருந்தது; அவர் வந்ததும் சொல்கிறேன் என்றாள்.

வந்தவர் கிளம்பத் தயாரானார். அவரை வழி அனுப்ப அனைவரும் வாசலில் நின்றனர். ஒரு பத்தடி தூரம் சென்ற அவர் திரும்பிப் பார்த்து, 'த்ரீ தௌசண்ட், மறந்திராதிங்க' என்று சொல்லிக் கொண்டு போனார்.

யாமினிக்கு என்னவெல்லாமோ சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் அவள் வயது காரணமாகவும் அக்காவின் மனம் அதனால் கஷ்டப்படக்கூடதென்றும் நினைத்து ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.

சிவராமன் வீடு வந்ததும் அவள் அம்மா நடந்ததை எல்லாம் சொன்னாள். சிவராமனுக்கு தன் வாழ்நாளில் முதன்முதலாக தன்மானத்தை இழந்ததாக தோன்றியது.கேட்டவுடன் பொங்கி வந்த கோபத்தை தான் அடக்கிக்கொண்டார். தனக்கு மூன்று பிள்ளைகளும் பெண்ணாக பிறந்து விட்ட காரணத்திற்காக தான் இன்னும் என்னென்ன அவமானங்களை தாங்க வேண்டியிருக்குமோ என்று மனம் வருந்தினார்.

பணம் அவர்கள் வீட்டில் தான் தொலைந்திருக்கும் என்று அவர் உள் மனம் சொன்னது. இருந்தாலும் தன் மகள் கல்யாணம் நின்று விடக்கூடாதென்பதற்காக பணத்தை கொடுத்து விடலாம் என்று இருவரும் முடிவெடுத்தனர்.

அவருக்கு தானே சென்று பணம் கொடுக்க மனம் இல்லாததால் தன் தம்பியிடம் கொடுத்தனுப்பினார்.


யார் மனதிலும் கல்யாண சந்தோஷம் இல்லை. அனைவரும் கனத்த மனதோடு இரவு தூங்க சென்றனர்.

யாமினிக்கு தூக்கம் வரவில்லை. மாலை நடந்தது பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் அனைவருக்கும் அவர் பேசிய விதம் பிடிக்கவில்லை என்பதை அறிந்திருந்தாள்.

"இப்படியெல்லாமா மனிதர்கள் இருப்பார்கள்?

ஒரு லட்சம் கொடுத்தவர்கள் எப்படி மூவாயிரம் மட்டும் குறைத்து வைப்பார்கள் என்று ஏன் அவர்களால் நினைக்க முடியவில்லை?

அப்படியே குறைவாக இருந்தாலும் வீடு தேடி வந்து கேட்க எப்படி மனது வந்தது; ஏதோ அவர்கள் சொந்த பணம் பொல?"

அக்காவைப் பிடித்ததால் தானே அத்தான் கணேஷ் திருமணம் செய்யப்போகிறார். அவருக்குத் தெரியாமலா அவர் அப்பா வந்திருப்பார்?

இப்படிப் பட்ட வீட்டிலா அக்கா வாழப்போகிறாள்?" மனம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருந்தது.

யாமினி தன் தந்தை இந்த அளவுக்கு சோகமாக இருந்து பார்த்ததில்லை. அப்பா செல்லமாகிய அவள் மனம் அவருக்காக வருத்தப்பட்டது.

"ஒரு பெண்ணின் கல்யாணத்தில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறதா?"

வரதட்சணை தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதை பத்தாம் வகுப்பு படிக்கும் அவள் புரிந்து கொள்ளாமல் இல்லை.

"தன் கல்யாணத்தில் தன் பெற்றோருக்கு இப்படி ஒரு நிலை வரக் கூடாது.
வரதட்சணை கொடுக்காமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லையென்றால் பெற்றோரைக் கஷ்டப்படுத்தும் இப்படி ஒரு கல்யாணம் தேவையில்லை.
தன் அக்கா இருவரைப் போல் ஊமையாக இருக்கக் கூடாது" என்று தீர்மானம் செய்து கொண்டாள்.

தனக்குள்ளே நடந்த விவாதத்தால் சூடான அவள் மனம் கடைசியில் அப்படியே உற்ங்கிப்போனது.

இது பசுமரத்தாணி - அப்படியே பதிந்திருக்கும்.

இது ஆள் மனதில் விழுந்த விதை - நிச்சயம் முளைக்கும்; விருட்சமாக வளரும்.