Thursday, March 26, 2009

கடவுளும் மூடநம்பிக்கைகளும் - 1

ஒரு வாரமாக எனக்கு கடுமையான முதுகு வலி. அம்மாவிடம் தொலைபேசியில் பேசும் போது இதைச் சொன்னேன். அவர்களும் தனக்குத் தெரிந்த மருந்தெல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் 'கடவுளை நல்லா வேண்டிக்கோ, எல்லாம் சரியாயிடும்' என்று சொன்னார்கள்.

அன்றிரவு நள்ளிரவில் திடீரென தூக்கம் போய் விட்டது. மனம் தானாக எங்கெல்லாமோ போய் விட்டு, கடைசியில் அம்மா சொன்ன விஷயத்துக்கு வந்தது. கடவுள் என்றால் என்ன? ஏன் வேண்டிக்கொள்ள வேண்டும் என்று பட்டிமன்றம் ஆரம்பித்தது.

மனிதன் தனக்குப் புரியாத விஷயத்தைத் தான் கடவுள் என்று சொல்ல ஆரம்பித்திருக்க வேண்டும். புரியாத விஷயமென்றால்...... குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வெப்பநிலையில் நீராவி மழையாக மாறுவதோ; மரங்கள் மட்கி நிலக்கரியாக, பெட்ரோலியமாக, வைரமாக மாறுவதோ இல்லை. இவை எல்லாம் வேதியியல் மாற்றங்கள்.

சூரிய ஒளி வீசும் திசையை நோக்கி ஒரு கிளையை நீட்டலாம் என்று மரம் நினைக்கிறதே அது புரியாத விஷயம்.
தன் பக்கத்தில் ஒரு கம்பி இருந்தால் அதைப் பிடித்துக் கொண்டு கொடி படர்கிறதே அது ஆச்ச்ர்யமான விஷயம்.
ஒரு கோழியின் அத்தனை உறுப்புகளையும் உருவாக்கும் சக்தி ஒரு முட்டைக்குள் இருக்கிறதே அது தான் அதிசயம்.

முட்டைக்குள் என்ன இருக்கிறது? டி என் ஏ இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத டி என் ஏ வில் எத்தனையோ விஷயங்கள் புதைந்து கிடக்கிறதே.. என்னைப் பொருத்த வரையில், ஒரு விஞ்ஞானியைப் பொருத்தவரையில் அது தான் கடவுள்.

சரி... இப்போ டி என் ஏ எங்கிருக்கிறது? எல்லா உயிர்களிடத்திலும் இருக்கிறது. இதற்கு மேலும் கடவுள் எங்கிருக்கிறாரென்று நான் சொல்ல வேண்டுமா?

பிரச்சனைகளுக்காக எங்கெங்கோ சென்று வேண்டுவதை விட தன் ஆழ் மனதிடம் சொன்னால் எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன். உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாய் இருக்கிறேன்.

No comments:

Post a Comment