Monday, March 23, 2009

வரதட்சணை

மாலதிக்கு நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்ததில் வீடே சந்தோஷமாக இருந்தது.

மாப்பிள்ளை கணேஷ், வீட்டிற்கு ஒரே பையன். வங்கியில் வேலை. வரதட்சணையாக ஒரு லட்சம் பணமும் ஐம்பது சவரன் நகையும் கேட்டிருந்தார்கள். நூற்பாலையில் வேலை பார்க்கும் சிவராமனுக்கு இது அதிகமாக தெரிந்தாலும் தன் மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமென்று நினைத்ததால் சம்மதித்தார்.

மாலதிக்கு இரண்டு தங்கைகள். லதா கல்லூரியிலும் யாமினி பத்தாம் வகுப்பிலும் படிக்கிறார்கள். தன் வீட்டில் புதிதாக ஒரு சொந்தம் வருவதில் யாமினிக்கு எல்லோரையும் விட மிகவும் சந்தோஷம்.

பணத்திற்காக சிவராமன் பலரிடம் கடன் வாங்கினார். திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு அவர்கள் கேட்ட ஒரு லட்சத்தை உறவினர்கள் சிலரோடு சென்று சிவராமன் கொடுத்து வந்தார்.

பணம் கொடுத்த மூன்றாம் நாள் கணேஷின் அப்பா யாமினியின் வீட்டிற்கு வந்தார். சிவராமன் வேலைக்கு சென்றிருந்ததால், அவள் அம்மா அவரை வரவேற்றார். மாலதி தன் வருங்கால மாமனாருக்கு தேநீர் கொண்டு வந்து கொடுத்தார். மகள்கள் மூவரும் அடுத்த அறையில் நின்று கொண்டு அவர் வந்த காரணம் அறிய ஆவலோடிருந்தனர்.

வந்தவர் தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

"நீங்க கொடுத்த ஒரு லட்சம் பணத்தை எண்ணிப் பார்த்தபோது மூவாயிரம் ரூபாய் குறையுது."

கேட்டுக்கொண்டிருந்த அனைவருக்கும் முகம் மாறிப்போனது.

அவர் மேலும் தொடர்ந்தார். " ஆரம்பமே சரி இல்லாதது போல் தோணுது. பணத்தை சீக்கிரம் கொடுங்க. அதன் பிறகு தான் கல்யாணப் பத்திரிகை அடிப்பது பற்றி யோசிக்கணும்.
மாலதியும் லதாவும் மௌனமாக இருந்தனர்.

ஆனால் கேட்டுக்கொண்டிருந்த யாமினிக்கு "போயா வெளியே" என்று கத்தணும் போல இருந்தது. ஆனால்... 'இது அக்காவின் வாழ்க்கைப் பிரச்சனை. நாம் எப்படி தலையிடுவது? நான் மட்டும் அக்காவின் நிலையில் இருந்தால் நிச்சயம் இப்படி சொல்லியிருப்பேன்' என்று நினைத்துக்கொண்டாள்.

அவள் அம்மாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருப்பினும் நிலைமையை சமாளிக்க, "நாங்கள் எண்ணிப் பார்க்கும் போது சரியாகத்தான் இருந்தது; அவர் வந்ததும் சொல்கிறேன் என்றாள்.

வந்தவர் கிளம்பத் தயாரானார். அவரை வழி அனுப்ப அனைவரும் வாசலில் நின்றனர். ஒரு பத்தடி தூரம் சென்ற அவர் திரும்பிப் பார்த்து, 'த்ரீ தௌசண்ட், மறந்திராதிங்க' என்று சொல்லிக் கொண்டு போனார்.

யாமினிக்கு என்னவெல்லாமோ சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் அவள் வயது காரணமாகவும் அக்காவின் மனம் அதனால் கஷ்டப்படக்கூடதென்றும் நினைத்து ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.

சிவராமன் வீடு வந்ததும் அவள் அம்மா நடந்ததை எல்லாம் சொன்னாள். சிவராமனுக்கு தன் வாழ்நாளில் முதன்முதலாக தன்மானத்தை இழந்ததாக தோன்றியது.கேட்டவுடன் பொங்கி வந்த கோபத்தை தான் அடக்கிக்கொண்டார். தனக்கு மூன்று பிள்ளைகளும் பெண்ணாக பிறந்து விட்ட காரணத்திற்காக தான் இன்னும் என்னென்ன அவமானங்களை தாங்க வேண்டியிருக்குமோ என்று மனம் வருந்தினார்.

பணம் அவர்கள் வீட்டில் தான் தொலைந்திருக்கும் என்று அவர் உள் மனம் சொன்னது. இருந்தாலும் தன் மகள் கல்யாணம் நின்று விடக்கூடாதென்பதற்காக பணத்தை கொடுத்து விடலாம் என்று இருவரும் முடிவெடுத்தனர்.

அவருக்கு தானே சென்று பணம் கொடுக்க மனம் இல்லாததால் தன் தம்பியிடம் கொடுத்தனுப்பினார்.


யார் மனதிலும் கல்யாண சந்தோஷம் இல்லை. அனைவரும் கனத்த மனதோடு இரவு தூங்க சென்றனர்.

யாமினிக்கு தூக்கம் வரவில்லை. மாலை நடந்தது பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் அனைவருக்கும் அவர் பேசிய விதம் பிடிக்கவில்லை என்பதை அறிந்திருந்தாள்.

"இப்படியெல்லாமா மனிதர்கள் இருப்பார்கள்?

ஒரு லட்சம் கொடுத்தவர்கள் எப்படி மூவாயிரம் மட்டும் குறைத்து வைப்பார்கள் என்று ஏன் அவர்களால் நினைக்க முடியவில்லை?

அப்படியே குறைவாக இருந்தாலும் வீடு தேடி வந்து கேட்க எப்படி மனது வந்தது; ஏதோ அவர்கள் சொந்த பணம் பொல?"

அக்காவைப் பிடித்ததால் தானே அத்தான் கணேஷ் திருமணம் செய்யப்போகிறார். அவருக்குத் தெரியாமலா அவர் அப்பா வந்திருப்பார்?

இப்படிப் பட்ட வீட்டிலா அக்கா வாழப்போகிறாள்?" மனம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருந்தது.

யாமினி தன் தந்தை இந்த அளவுக்கு சோகமாக இருந்து பார்த்ததில்லை. அப்பா செல்லமாகிய அவள் மனம் அவருக்காக வருத்தப்பட்டது.

"ஒரு பெண்ணின் கல்யாணத்தில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறதா?"

வரதட்சணை தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதை பத்தாம் வகுப்பு படிக்கும் அவள் புரிந்து கொள்ளாமல் இல்லை.

"தன் கல்யாணத்தில் தன் பெற்றோருக்கு இப்படி ஒரு நிலை வரக் கூடாது.
வரதட்சணை கொடுக்காமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லையென்றால் பெற்றோரைக் கஷ்டப்படுத்தும் இப்படி ஒரு கல்யாணம் தேவையில்லை.
தன் அக்கா இருவரைப் போல் ஊமையாக இருக்கக் கூடாது" என்று தீர்மானம் செய்து கொண்டாள்.

தனக்குள்ளே நடந்த விவாதத்தால் சூடான அவள் மனம் கடைசியில் அப்படியே உற்ங்கிப்போனது.

இது பசுமரத்தாணி - அப்படியே பதிந்திருக்கும்.

இது ஆள் மனதில் விழுந்த விதை - நிச்சயம் முளைக்கும்; விருட்சமாக வளரும்.